மதுரையில் வாகன சோதனையில் துப்பாக்கியுடன் சிக்கிய தந்தை-மகன் கைது செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை
மதுரையில் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், சிலர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர விட்டார்.
அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு காளவாசல் பகுதியில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
சந்தேகத்தின்பேரில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர்கள் மதுரை நேரு நகரை சேர்ந்த சரவணன் (54), அவரது மகன் ஜெயசூர்யபிரகாஷ் (28) என்பது தெரிய வந்தது. அவர்கள் அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.