மதுரை மாவட்டம் கப்பலுார் தொழிற்பேட்டையில் அக்.,15ல் பசை தயாரிப்பு கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர்களிடம் துறை டி.ஜி.பி., பி.கே. ரவி நலம் விசாரித்தார்.
கப்பலுாரில் நடந்த இந்த பயங்கர தீ விபத்தில் திருமங்கலம், மதுரை நகர், தல்லாகுளம், கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில் கம்பெனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தின்னர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறியதில் நிலைய அலுவலர் பாலமுருகன், சிறப்பு அலுவலர் பாலமுருகன், வீரர்கள் கார்த்திக், கல்யாணகுமார் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நேற்று டி.ஜி.பி., பி.கே. ரவி சந்தித்து நலம் விசாரித்தார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அவர் கூறியதாவது:
தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.3.50 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. தமிழக தீயணைப்பு வீரர்களுக்கு, நிலையங்களுக்கு அதிநவீன உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தீபாவளிக்காக பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் கூடுவதால் அங்கு தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
தென்மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் வினோத், கூடுதல் அலுவலர் பாண்டி உடனிருந்தனர்.