Police Department News

பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்களை செயல்படுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்களை செயல்படுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையைச் சேர்ந்த வெர்னிகா மேரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதை தடுக்க கடந்த 2012-ம் ஆண்டில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்குவதற்கு நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மையங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படுகின்றனவா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதற்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. இந்த மையங்கள் முறையாக செயல்படவேண்டும் என்று மனு அளித்தும் பலன் இல்லை.

எனவே, 2012-ம் ஆண்டு வெளியான அரசாணையின்படி அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடமாடும் மன ஆலோசனை மையங்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 2012-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டும், இதுவரை நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? பள்ளிகளில் மனநல ஆலோசனை மையங்களை முறையாக செயல்படுத்துவது அவசியம். இது, மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.