Police Department News

காரிமங்கலம் அருகே காரில் கடத்தப்பட்ட பெண் 5 மணி நேரத்தில் மீட்பு 4 பேர் அதிரடி கைது

காரிமங்கலம் அருகே காரில் கடத்தப்பட்ட பெண் 5 மணி நேரத்தில் மீட்பு 4 பேர் அதிரடி கைது

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் கடத்தப்பட்ட பெண்ணை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்திய 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தாய், மகன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி அருகே உள்ள ராமண்ணன்கொட்டாயை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 50). இந்த தம்பதிக்கு முத்து என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், லட்சுமி தனது மகனுடன் வசித்து வந்தார். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல் சூளையில் பணிபுரிவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் கருங்கல்கோட்டாயை சேர்ந்த கிருஷ்ணன் (45) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் முன்பணமாக பெற்றனர். இதையடுத்து தாய், மகன் ஆகியோர் கிருஷ்ணகிரி அருகே ஆலமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கிருஷ்ணனுக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட லட்சுமி, தனது மகன் முத்துவுடன் ராமண்ணன் கொட்டாய்க்கு வந்தார். பின்னர் லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணன், 4 பேருடன் ராமண்ணன்கொட்டாய்க்கு காரில் வந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த லட்சுமியை அவர்கள் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். அதனை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றபோது, அவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்து, இரவு 8 மணிக்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் புகார் அளித்தார். அதில் தாங்கள் முன்பணமாக பெற்ற ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்துக்கு பதில் ரூ.5 லட்சம் கேட்டு தனது தாயை, அடியாட்களுடன் சேர்ந்து கிருஷ்ணன் கடத்தி சென்றதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையில் தனிப்படை அமைத்து, கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லட்சுமி கிருஷ்ணகிரி அருகே உள்ள செங்கல் சூளையில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் லட்சுமியை மீட்க கிருஷ்ணகிரிக்கு விரைந்தனர். 5 மணி நேரத்தில் மீட்பு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் செங்கல் சூளையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லட்சுமியை மீட்டனர். மேலும் அவரை காரில் கடத்திய பாறையூரை சேர்ந்த கோபி (29), விடுதன்கொட்டாயை சேர்ந்த விஜயகுமார் (34), கருங்கல்கொட்டாயை சேர்ந்த பிரபு (24), சிட்டுகொட்டாயை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணனை தேடி வருகிறார்கள். இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே காரில் கடத்தப்பட்ட பெண்ணை 5 மணி நேரத்தில் மீட்ட காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.