Police Department News

போலீஸ் அதிகாரிக்கு அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம். ஐகோர்ட் ரத்து செய்தது

போலீஸ் அதிகாரிக்கு அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம். ஐகோர்ட் ரத்து செய்தது

ஒவ்வொரு போலீஸ் விசாரணையையும், மனித உரிமை மீறலாக எடுத்துக் கொள்ள முடியாது’ எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், போலீஸ் உதவி கமிஷனருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மனித உரிமை கமிஷன் உத்தரவை ரத்து செய்தது

சென்னையில் வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை, ரமேஷ் என்பவர் நடத்துகிறார். கிருஷ்ணமூர்த்தி, சுமித்தி சலானி என்பவர்களுடன், வியாபார பரிவர்த்தனை வைத்துள்ளார். சலானியிடம் இருந்து தனக்கு பாக்கி பணம் வராததால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து விசாரணை நடந்துள்ளது.

தன்னிடம் வலுக்கட்டாயமாக, போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவாதம் பெற்றதாகவும், ‘பென்ஸ்’ காரின் அசல் ஆவணங்களை எடுத்துக் கொண்டதாகவும், சலானி உடன் கூட்டு சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், மாநில மனித உரிமை கமிஷனில், ரமேஷ் புகார் அளித்தார்.
இதை விசாரித்த கமிஷன், உதவி கமிஷனர் லட்சுமணன் மனித உரிமை மீறல் செய்துள்ளார் என்பதால், அவரிடம் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற, ரமேஷுக்கு உரிமை உள்ளது என உத்தரவிட்டது; துறை நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், உதவி கமிஷனர் லட்சுமணன் மனுத் தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜராகி, ‘சிறப்பான பணிக்காக, மனுதாரர் விருதுகள், ரொக்கப் பரிசு, பதக்கம் பெற்றுள்ளார். விசாரணைக்காகதான் அழைத்தார். குற்றச்சாட்டில் அடிப்படையில்லை’ என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

துன்புறுத்தல், மிரட்டல் என எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக, கமிஷன் முடிவெடுத்துள்ளது. புகார் கொடுத்த ரமேஷுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டது. போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல் நடக்கவில்லை எனக் கூற முடியாது. ஆனால், வழக்கமாக போலீசார் நடத்தும் ஒவ்வொரு விசாரணையையும், மனித உரிமை மீறலாக கூற முடியாது.

பொது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. சிவில் வழக்கையும், கிரிமினல் வழக்கையும் வேறுபடுத்த தெரியவில்லை. போலீசாருக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. சட்டம் – ஒழுங்கை கையாளும் முக்கிய பணியை, போலீஸ் ஆற்றுகிறது. எச்சரிக்கையுடன் சில வழக்குகளை அவர்கள் கையாள வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக கூற முடியாது. எனவே, மனித உரிமை கமிஷன் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.