கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு திண்டுக்கல் வந்த 2 வாலிபர்களை மடக்கிய போலீசார்
நெல்லை முத்தமிழ் தோட்டத்தை சேர்ந்த சாமுவேல் மகன் கிறிஸ்டோபர்(26). அதேபகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் வினித்(25). இவர்கள் 2 பேரும் கோவை மலர்காடு என்ற பகுதியில் தங்கி குனியமுத்தூரில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தனர்.
அதேபகுதியில் சபரிநாதன்(30) என்பவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் தொழில் விசயம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சபரிநாதனை கிறிஸ்டோபர் மற்றும் வினித் ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதில் படுகாயமடைந்த சபரிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனைதொடர்ந்து போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கிறிஸ்டோபர், வினித் ஆகியோர் ஒரு சரக்கு வாகனத்தில் தங்களது சொந்த ஊரான நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் வந்த வாகனத்தின் அடையாளத்தை வைத்து கோவை போலீசார் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பிக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மூலசத்திரம் பகுதியில் இன்று காலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், குமார், போலீசார் அறிவுத்தம்பி, ராஜபாண்டி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கோவை பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருந்தபோதும் போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கியபோது கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு தப்பிவந்தவர்கள் என உறுதியானது. இதனைதொடர்ந்து குனியமுத்தூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்து கிறிஸ்டோபர் மற்றும் வினித்தை ஒப்படைத்தனர்.
அவர்கள் வந்த சரக்கு வாகனம் மற்றும் அதில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிறிஸ்டோபர் மீது நெல்லை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் வினித் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்