வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இறைச்சி கடை நடத்தி வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், டி.எஸ்.பி. ஆர்லிஸ் ரெபோனி மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
சம்பவம் நடப்பதற்கு முன்தினம் மாலை ராஜா முகமது தனது மனைவியுடன் பள்ளிவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூரை சேர்ந்த சுந்தரபாண்டி (25), ஆனந்தன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ராஜா முகமது மீது மோதியுள்ளனர். இதில் அவர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்ததின் பேரில் 3 பேரும் சென்றனர்.
ஆனால் ஆத்திரம் அடங்காத சுந்தரபாண்டி, ஆனந்தன் உள்பட 3 பேர் ராஜா முகமதுவை பழி தீர்க்க முயன்றதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சுந்தரபாண்டி, ஆனந்தன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.