நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் காவல் துறைக்கு பங்கு உண்டு: சப்-இன்ஸ்பெக்டரை பாராட்டிய முதலமைச்சர்
மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய எஸ்.ஐ.யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.
குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.