ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி- வடமாநில வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருபவர் செல்வராஜ். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவது வீட்டின் ஒரு பகுதியில், 2 தனியார் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரான செல்வராஜூக்கு தீ கருகிய வாடை வந்துள்ளது.
இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து எந்திரத்தை வெல்டிங் மிஷின் உதவியுடன் உடைத்து திறக்க முயன்று கொண்டிருந்தனர். மற்றொரு நபர் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.
செல்வராஜ் வருவதை பார்த்து, வெளியே காவலுக்கு நின்றிருந்த நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மற்ற 2 மர்ம நபர்களையும் ஏ.டி.எம். மையத்திற்குள்ளேயே வைத்து ஷட்டரை அடைத்து செல்வராஜ் பூட்டு போட்டார்.
பின்னர் இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், ஷட்டரை திறந்து, அந்த 2 நபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
2 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே, ஏ.டி.எம். கொள்ளை முயற்சி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனிடையே சாதுர்யமாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடிக்க உதவிய போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர் செல்வராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரும் அவரை பாராட்டினார்.