காரிமங்கலம் பகுதிகளில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல், உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில், காரிமங்கலம் ஒன்றியம் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, சமத்துவபுரம், பொன்னேரி, கரகோடள்ளி மற்றும் காரிமங்கலம் பைபாஸ், அகரம் பிரிவு ரோடு போன்ற பகுதிகளில் உள்ள மாம்பழங்கள் விற்பனை செய்யும் சாலையோர விற்பனை கடைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். திருமதி.ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ். அவர்கள் தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
மாங்காய்களை விரைவாக விற்பனை செய்வதற்காக ஒரு சில கடைகளில் ஒரு சில வியாபாரிகள் ரசாயனம் கெமிக்கல் (கார்பைடு கற்கள்) மற்றும் எத்திலின் பவுடர் உபயோகித்து காய்களை பழுக்க வைப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகார் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.
கடைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் கார்பைடு கல் மற்றும் எத்திலின் பவுடர் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால்
மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதை கண்டறிய ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் நீரை நிரப்பி நிறைவாக பழுத்த பழங்களை தண்ணீரில் போடும்போது இயற்கையாக பழுத்த பழங்கள் நீரின் அடியில் சென்று தங்கும், செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் மேலே மிதக்கும். மேலும் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் ஒரே சீரான கலரிருக்கும், பழங்களை நுகர்ந்து பார்க்கும் போது போது பழ வாசனை அடிக்காது. இன்றைய ஆய்வில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பெரியாம்பட்டி சமத்துவபுரம் பகுதி, பொன்னேரி சாலை ஓர தற்காலிக மாம்பழ விற்பனை கடைகளில் மூன்று கடைகள் மற்றும் காரிமங்கலம் அகரம் பிரிவில் ஒரு மொத்த விற்பனை கடை என நான்கு கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சுமார் 200 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இப்பழங்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஒருங்கிணைப்போடு, தூய்மை பணியாளர்கள் உதவியுடன் காரிமங்கலம் பேரூராட்சி திட கழிவு மேலாண்மை கிடங்கில் கிருமி நாசினி தெளித்து முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.