Police Department News

மதுரையில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை கடித்து குதறிய நாய்கள்

மதுரையில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை கடித்து குதறிய நாய்கள்

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றனர். நாய்கடி பாதிப்பு என்பது கொடுமையானது. நாய்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படு பவர்களின் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இறப்பார்கள். எனவே மதுரை நகரில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முன்பு நாய்களுக்கு கருத்தடை செய்ய சிறப்பு வாகனங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது வெகு சொற்பமாக நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படுகின்றன. இதனால் நகரில் நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரம் குறித்து தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமையும் சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கான பதிலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது தெரியவந்தது. இதேபோல் கடந்த 2021 -ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும்,

2022 -ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி பகுதியில் மாதத்திற்கு 200 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், நாய் கடியால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.