Police Recruitment

மதுரையில் வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு

மதுரையில் வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு

மதுரை விமான நிலையம் அருகே உள்ள சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமணி(வயது34). இவர் அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளை கும்பல் திடீரென குருமணியை மறித்து சரமாரியாக தாக்கினர்.

தொடர்ந்து அவருடைய மோட்டார்சைக்கிள், செல்போனையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம், மண்டேலாநகர் செல்லும் சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருக்கும். இதனை பயன்படுத்தி சாலையில் மறைந்திருந்து சமூக விரோதிகள் வாகன ஓட்டிகளையும், அந்த வழியாக நடந்து செல்வோரையும் தாக்கி நகை-பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக அவனியாபுரம் ரிங்ரோடு, மண்டேலாநகர், அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோடுகளில் அண்மை காலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவனியாபுரம போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, மீனாட்சி நகர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்வோரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே போலீசார் வழிப்பறி சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.