பாலக்கோட்டில் , உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வரப்பட்ட புகார் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ். உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் அவர்கள், பாலக்கோடு பஸ் நிலையம், எம். ஜி. ரோடு, பைபாஸ் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு செய்தார்.
ஆய்வில் இரண்டு உணவகங்கள் மற்றும் ஒரு சாலை ஓர துரித உணவு கடையில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர் டப்பிகள் பறிமுதல் செய்து அப்புறப் படுத்தப்பட்டது. மேலும் ஒரு உணவகத்தில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் சுமார் 3 லிட்டர் அளவு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பயன்படுத்திய சமையலை எண்ணையை உணவு பாதுகாப்புத்துறை அங்கீகாரம் பெற்ற பயன்படுத்திய சமையல் எண்ணெய் பெறும் (ரூகோ) டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக்கொள்ள விழிப்புணர்வு செய்யப்பட்டது. இரண்டு கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி எறியப்படும் நெகிழித் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இன்றைய தினம் மூன்று கடைகளுக்கு உடனடி அபராதம் தலா 1000 வீதம் 3000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவகங்கள் சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்கவும் சமையலறை மற்றும் இருப்பு அறை வெளிச்சமாக இருக்கவும், பணியாளர்கள் உரிய கவச உடைகள் மேலங்கி, ஏப்ரான், தலைமயுறை, கையுறை அணிந்திருக்கவும், மாமிச இறைச்சிகள், மீன் இறைச்சிகள் புதியதாகவும், அதிக நாட்கள் குளிர் பதன பெட்டியில் வைக்காமலும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்காமலும் உபயோகப்படுத்த கேட்டுக்கொண்டதுடன், சமைத்த உணவு , இறைச்சிகளை பிரிட்ஜ் மற்றும் குளிர்பதன பெட்டிகளில் கண்டிப்பாக வைக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டது. மேலும் உபயோகப்படுத்தும் மூலப்பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உரிய தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பு தேதி முடிவு தேதி போன்ற விவரங்கள் உள்ளனவா என்பதை அறிந்து உபயோகப்படுத்தவும், உணவுகளை பரிமாறுவதற்கு மற்றும் பார்சல் செய்வதற்கும் வாழை இலை பயன்படுத்தவும் தடை செய்யப்பட்ட நெகிழிகளை அறவே தவிர்க்கவும் விழிப்புணர்வு செய்தார். இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக தாலுக்கா முழுதும் நடைபெற மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.