Police Recruitment

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது.

இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடையின் மேல் பரப்பில் உள்ள குடோனில் இருந்து இன்று காலை 8.15 மணி அளவில் திடீரென்று கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அப்பகுதியினர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடைக்கு அருகாமையில் வணிக நிறுவனங்கள் நடத்தி வந்தவர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வெளியே வந்தனர்.
இதற்கிடையே ஒரு சில விநாடிகளில் கரும்புகை வெளியேறிய குடோனில் தீ பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மதுரை அனுப்பானடி, தல்லாகுளம், திடீர் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மின்னல் வேகத்தில் விபத்து நடந்த பகுதிக்கு வந்தன.

அதில் வந்த வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகவும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. நெரிசல் மிக்க பகுதி என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு தடுப்பு ஏற்படுத்திய போலீசார் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அனுமதிக்கவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் சில இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. தீயணைப்பு துறையினர் மாநகராட்சி சார்பாக பழமையான கட்டிடங்களை கண்டறிந்து ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்தால் இப்பகுதி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. தீ அணைக் கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த குடோனில் தீப்பிடிக்க தொடங்கியது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது

Leave a Reply

Your email address will not be published.