National Police News

ரயில் நிலைய நடைமேடையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்: உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார்

தானே பிரசவம் பார்த்து பெற்ற குழந்தையுடன் ரம்யா, கணவர் வெங்கடேஷ். உடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார்.
எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, தனக்குத் தானே அவர் பிரசவம் பார்த்துக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அடுத்த பாப்பநாடுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக சென்னைக்கு வந்த இவர், நிறைமாத கர்ப்பிணியான மனைவி ரம்யாவையும் (25) உடன் அழைத்து வந்துள்ளார்.

வேலை முடிந்து, இருவரும் மீண்டும் ஆந்திரா திரும்புவதற்காக கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அடுத்த நாள் காலையில்தான் ரயில் இருப்பதாக கூறப்பட்டதால், ரயில் நிலைய நடைமேடையிலேயே படுத்து தூங்கினர். அதிகாலை 3 மணி அளவில் ரம்யாவுக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. கணவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை எழுப்பாமல் ரம்யா தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டார். தொப்புள் கொடியையும் அவரே அறுத்துக்கொண்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்த கணவர், இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில், அங்கு ரோந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர், ரயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்துக்கு தகவல் கொடுத்தார். ரம்யாவுக்கும், குழந்தைக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.