விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் புர்கா அணிந்து கொண்டு டான்ஸ்.. வேலூர் இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் புர்கா அணிந்து கொண்டு நடமாடியது சர்ச்சையான நிலையில், இதில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் எப்போதும் விநாயகரைத் தான் முழு முதற்கடவுளாக வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த வாரம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நாளில் பொதுமக்கள் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்தனர்
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படும்.. குறிப்பாகப் பல பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். சிறிதும் பெரிதுமாக பல்வேறு இடங்களில் சிலைகள் வைப்பார்கள். பிறகு அவை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும். இந்தாண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட நிலையில், ஊர்வலமாக அவற்றை எடுத்துச் செல்ல சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. களிமண் உட்பட மக்கும் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும் என அறிவித்தனர்.
அதன்படி தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்று வந்தது. அப்படி தான் வேலூரிலும் மிக சிறப்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அங்கே புர்கா அணிந்து கொண்டு வந்த ஒருவர் திடீரென டான்ஸ் ஆட தொடங்கினார். அவருடன் சேர்ந்த மேலும் பலரும் டான்ஸ் ஆடினர். அப்போது தான் புர்கா அணிந்து வந்துள்ளது ஒரு ஆண் என்பது தெரிய வந்தது.
இதை அங்குச் சென்ற சிலர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். கடந்த செப். 21ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 3 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பலரும் இந்தச் சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இது குறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அந்த வீடியோவில் புர்கா அணிந்து கொண்டு டான்ஸ் ஆடிய நபர் விருத்தம்பட்டைச் சேர்ந்த அருண்குமார் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட குற்றஞ்சாட்டி அருண்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இதுபோல யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். அந்த வீடியோ அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார், மற்றவர்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.