Police Department News

ஓட்டல் தொழிலாளி கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் கைது

ஓட்டல் தொழிலாளி கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் கைது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர்.
இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவர் புளியங்குடி அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரம் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக மாரியப்பன் தாயார் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
போலீசார் பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில், வாசுதேவநல்லூர் அக்ரஹாரம் சந்து தெருவை சேர்ந்த சண்முகையா மகன் விக்னேஷ்(24) என்பவர் மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விக்னேசுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் பால் வியாபாரம் செய்து வந்தார். வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்து வந்தார். அந்த வகையில், கொலை செய்யப்பட்ட மாரியப்பன் வீட்டுக்கும் அவர் பால் கொடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், மாரியப்பனின் மனைவி கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மாரியப்பன் அதிகாலை 5 மணிக்கு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் தினமும் வருவார். இதனை பயன்படுத்தி கனகா, அந்த வாலிபருடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே பால் வியாபாரத்திற்காக விக்னேஷ், மாரியப்பனிடம் கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கனகாவும், விக்னேசும் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை திடீரென வீட்டுக்கு வந்த மாரியப்பன் பார்த்து விட்டார். உடனே அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார். மேலும், இனி தனது வீட்டுக்கு பால் ஊற்ற வரவேண்டாம் என்றும், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறும் மாரியப்பன் கண்டிப்பாக பேசியுள்ளார்.

இதனால் விக்னேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
கனகாவும் தனது கள்ளக்காதலனை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் அடைந்துள்ளார். இதையடுத்து விக்னேசை செல்போனில் தொடர்பு கொண்ட கனகா, மாரியப்பன் இருக்கும் வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது. எனவே அவரை கொலை செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து 2 பேரும் சேர்ந்து மாரியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று அதிகாலையில் மாரியப்பனுக்கு போன் செய்த விக்னேஷ், புளியங்குடி பகுதியில் நிற்பதாகவும், கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய மாரியப்பன் வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது நவாசாலை பகுதியில் நின்று கொண்டிருந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். பின்னர் அவரும் ஏதும் தெரியாதது போல் வீடுகளுக்கு பால் ஊற்ற சென்றுவிட்டார். அவரது மனைவி கனகாவும் வழக்கம்போல் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்து வந்துள்ளார். ஆனால் மாரியப்பன் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்த போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விக்னேசை பிடித்து விசாரித்த போது அவர் கனகாவுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலையில் தொடர்புடைய கனகாவையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை விக்னேஷ், கனகா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published.