மது போதையில் நண்பரை அடித்துக்கொன்ற வாலிபர்- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வெறிச்செயல்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன் குறிச்சி கிராமம் ஆவுடையார்புரத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் சக்திமோகன் (வயது 48). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம் ஆகும்.
சக்திமோகனுக்கு அவரது அக்காள் மகளை திருமணம் செய்து வைத்து ஒரு மகன் உள்ள நிலையில் சக்தி மோகன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி கணவரை பிரிந்து குழந்தையுடன் மதுரையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் தனியாக இருந்த சக்திமோகன் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இதேபோல் தேவன் குறிச்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் மகன் கார்த்திக் கணேஷ் (29) என்பவரும் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்ததால் இருவரும் நண்பர்களாகி ஒன்றாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
இதற்கிடையே இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திவிட்டு அடிக்கடி போதையில் சண்டையிட்டு கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை சக்திமோகன் அவரது உறவினரான கருணாகரன் என்பவரிடம் இருவரும் மதுரை திருநகர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வேலைக்கு சென்று திரும்பிய சக்திமோகனும், கார்த்திக்கணேசனும் மது அருந்தி விட்டு இரவு ஒரு மணிளவில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார்த்திக் கணேஷ், தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி சக்திமோகனிடம் கேட்டுள்ளார். ஆனால் சக்தி மோகன் பணம் தர மறுத்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் கணேஷ், சக்திமோகனின் முகத்திலும் நெஞ்சிலும் மாறி மாறி கைகளால் குத்தியுள்ளார். இதில் மூர்ச்சையாகி சக்திமோகன் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட கார்த்திக்கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சக்திமோகனின் உறவினர் கருணாகனுக்கு தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது சக்திமோகன் இறந்து கிடந்தார். இதையடுத்து கருணாகரன் டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் விடிரைந்து வந்த போலீசார், சக்திமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக் கணேசை தேடி வருகின்றனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மது அருந்தி விட்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.