பட்டப்பகலில் பிரபல ரவுடி கொலை: பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய நெல்லையை சேர்ந்த 4 பேர் கைது
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 31). இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமார் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலம் முடிந்த பின் வெளியே வந்த கிருஷ்ணகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியில் கிருஷ்ணகுமார் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனியாக தொழில் தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு கிருஷ்ணகுமார் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை திருநகரை அடுத்த கூத்தியார்குண்டு-கருவே லம்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்றபோது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கிருஷ்ணகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் கொலையாளிகள் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாரிராஜ் (30), மேலகுளத்தைச் சேர்ந்த நாராயணன் (29), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), சாலமன் சியான் பிரபாகரன் (29) என தெரிந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிராஜ் ஒரு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கு சாட்சி சொல்லக் கூடாது என கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் பாரில் இருந்த மாரிராஜை, கிருஷ்ணகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாரிராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் கிருஷ்ணகுமாரை கொலை செய்ய மாரிராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
நேற்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது கிருஷ்ணகுமாரை, மாரிராஜ் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.