வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் நகை பறிப்பு: சாலையில் தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் வைகை நதி தெருவைச் சேர்ந்தவர் திலக்குமார் என்பவரது மனைவி லதா (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் லேசான மழை பெய்துகொண்டிருந்த நிலையில் லதா பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். ஆனால் அதனை லதா கவனிக்கவில்லை. லதாவின் அருகில் நெருங்கி வந்த மர்மநபர்கள் திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை இழுத்து பறித்தனர்.
3இதனை சற்றும் எதிர்பாராத அவர் தனது வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். மொபட்டில் இருந்து லதா கீழே விழுந்த நிலையிலும் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் தரதரவென அவரை சாலையில் இழுத்தபடி செயினை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் லதாவை தரதரவென்று சாலையில் இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் ஜமால், இன்ஸ்பெக்டர் சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
மதுரையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்று சென்று பெண்ணிடம் ஈவு இரக்கமின்றி தரதரவென இழுத்துச் சென்று தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.