நாட்டின் நலனுக்காக செல்போன் ஒட்டுக்கேட்பு.. அந்த தகவல்களை வெளியிட தேவையில்லை.. டெல்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய மொபைல் ஒட்டுக்கேட்பது குறித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உத்தரவின் பெயரில் நமது நாட்டில் சிலரது மொபைல் எண்களை அரசே ஒட்டுக்கேட்கும்.
இதற்கிடையே இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மொபைல் பயனரின் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்பது பற்றிய தகவலை வழங்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டெல்லி ஐகோர்ட்: நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பிற நாடுகளுடனான உறவுகள், சட்ட ஒழுங்கு, குற்றங்களைத் தடுப்பது போன்ற காரணங்களுக்காக அரசு அறிவுறுத்தல் கீழ் செய்யப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படுவதாக டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி நீதிபதி அமித் மகாஜன் கூறுகையில், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலன், பாதுகாப்பிற்காக இப்படிச் செய்வது அவசியம் என்று அதிகாரி திருப்தி அடைந்தால், தொலைப்பேசியை இடைமறிப்பது அல்லது ஒட்டுக் கேட்பது அல்லது கண்காணிப்பது தொடர்பாக உத்தரவு நிறைவேற்றப்படுகிறது. மற்ற நாடுகள் உடனான நட்புறவு, சட்ட ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்கிறார்கள்.
இந்த வழக்கில், அத்தகைய தகவல்களை வெளியிடுவது, விசாரணை செயல்முறையைப் பாதிக்கலாம். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார நலன், உறவுகள் ஆகியவற்றில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். இது வெளி நாடுகள் உடனான உறவுகள் அல்லது குற்றத்தைத் தூண்ட வழிவகுக்கும், எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8-வது பிரிவின் விதிமுறைகளின் கீழ் இதற்கு விலக்கு அளிக்கப்படும்.
தொலைப்பேசி ஒட்டுக்கேட்பது என்பது டெலிகாம் நிறுவன விவகாரங்களின் கீழ் வராது. இந்த வழக்கில் கோரப்படும் தகவல்களும் சட்டத்தின் கீழ் டிராய் தொடர்புடையது இல்லை. எந்தவொரு மாறுபட்ட உத்தரவும் டிராய் அமைப்பிற்குக் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்கும். இது டிராய் சட்டத்தின் மூலம் அடைய விரும்பும் நோக்கங்களை நிறைவேற்றாது.
விதிமுறைகள் இல்லை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், அந்தத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் உறுதிப்படுத்தவும் தொலைத்தொடர்பு சேவைகளை ஒழுங்குபடுத்தும் தான் டிராய் உருவாக்கப்பட்டது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது எந்தவொரு தனியார் நிறுவனம் தொடர்பான எந்த தகவலையும் உள்ளடக்கியது.. அதில் போன் ஒட்டுக்கேட்பு தொடர்பான தகவல்களோ கோர முடியாது” என்று கூறியுள்ளது
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனி நீதிபதி இது குறித்த தகவல்களைக் கொடுக்க உத்தரவிட்ட நிலையில், அதற்கு டெல்லி ஐகோர்ட் இப்போது தடை வித்துள்ளது. வக்கீல் கபீர் சங்கர் போஸ் என்பவர் ஆர்டிஐ மூலம் தனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா இல்லையா.. எந்த அமைப்பால் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களைக் கோரி ஆர்டிஐ மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து டெலிகாம் நிறுவனங்கள் தரப்பில், “ஒரு தொலைப்பேசி எண்ணை இடைமறிக்கும் உத்தரவுகள் குறிப்பிட்ட ரேங்கில் இருக்கும் அரசு அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தகைய தகவல்களை நுகர்வோருக்கு வழங்க முடியாது. அது தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும்” என்று கபீர் சங்கர் போஸுக்கு பதில் அளித்திருந்தது. இந்த பதில் மனுவை எதிர்த்து அவர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இந்த தகவல்களைக் கோர முடியாது என்பது வோடபோன் தரப்பு வாதம்.. இருப்பினும், மத்திய தகவல் ஆணையம் இந்த தகவல்களைத் தர உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், அதில் தான் இப்போது டெல்லி ஐகோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.