Police Department News

கள்ளக்காதலியை மிரட்டிய கொத்தனார் படுகொலை; விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் வெறிச்செயல்

கள்ளக்காதலியை மிரட்டிய கொத்தனார் படுகொலை; விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் வெறிச்செயல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 32). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நிலையில் இவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த திருமணமான பெண் சமீப காலமாக அவரது உறவுக்காரரான அதே பகுதியைச்சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார்(39) என்பவருடனும் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ஆறுமுகம் அந்தப் பெண்ணை செந்தில்குமாரிடம் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த 30ம் தேதி காலை விளாத்திகுளம் பஜாரில் அப்பெண்ணை வழிமறித்து ஆறுமுகம் சண்டை போட்டுள்ளார். இதனை அந்த பெண்மணி செந்தில்குமாரிடம், ஆறுமுகம் தன்னை தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து செந்தில்குமார், ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதனால் கட்டிடத்தொழிலாளியான ஆறுமுகத்தை கொலை செய்ய முடிவு செய்த ஓட்டுநர் செந்தில்குமார், சனிக்கிழமை காலை முதலே ஆறுமுகத்தை கொலை செய்ய அவரைப் பின்தொடர்ந்துள்ளார்‌. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 9.15 மணி அளவில் மது குடிப்பதற்காக மேட்டுப்பட்டி சாலையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடை அருகில் தனது நண்பர்களுடன் குடிப்பதற்காக ஆறுமுகம் சென்றுள்ளார்.

இதைத்தெரிந்து கொண்ட ஓட்டுநர் செந்தில்குமார், தன்னுடன் ஓட்டுநர்களாக வேலை செய்து வரும் அவரது சகோதரர் செல்வகுமார்(21) மற்றும் நண்பர்களான விளாத்திகுளத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன்(24), ஜெயக்குமார்(23) ஆகிய 4 பேரும் TATA ACE வாகனம் மற்றும் பைக்கில் அங்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கொத்தனார் ஆறுமுகத்தை, செந்தில்குமாரும், அவருடன் சென்ற 3 ஓட்டுநர்களும் இரும்பு கம்பியால் தலையில் அடித்து அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு தரதரவென இழுத்துச்சென்று தலை மற்றும் கண் பகுதியில் கத்தியால் குத்தி உள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஆறுமுகத்தின் நண்பர்களையும் கத்தியை காட்டி கிட்ட வந்தால் குத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் இரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் சரிந்து விழுந்தவுடன் கொலை செய்த டிரைவர் செந்தில்குமார் மற்றும் செல்வகுமார், முத்துமாரியம்மன், ஜெயக்குமார் ஆகியோர் அங்கிருந்து வானங்களை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த கொத்தனார் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது கொலை செய்த செல்வகுமார், முத்து மாரியப்பன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.