Police Department News

கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!’ – ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின்

கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!’ – ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின் உறவினர்கள்தூத்துக்குடியில் கந்துவட்டிப் பிரச்னையால் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் தொழில் செய்து வந்த இவர், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், சாகுல் ஹமீது கடனை திருப்பிக் கொடுக்காததால், கண்ணன் உட்பட 6 பேர் சேர்ந்து சாகுல் ஹமீதை கடந்த 14-ம் தேதி காரில் கடத்திச் சென்றனர். பின்னர், அவரை ஆழ்வார்திருநகரியில் கண்ணன் நடத்திவரும் மளிகைக் கடையின் பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.அன்று மாலை சாகுல் ஹமீதை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர். இதில், படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய சாகுல் ஹமீதை உறவினர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சாகுல் ஹமீது உயிரிழந்தார்.இது குறித்து ஏரல் காவல்நிலைய ஆய்வாளர் பட்டாணி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஏரலைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கண்ணன் மற்றும் அவரின் கூட்டாளிகளான முத்துபாண்டி, ஜான், ஆறுமுகநயினார் உட்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடனை திருப்பித் தராததால் இளைஞரைக் கடத்தி தாக்கியதால் அவர் உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து சாகுல் ஹமீதின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கந்து வட்டி கொடுத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவரின் உறவினர்கள், சாகுல் ஹமீது சாவுக்குக் காரணமான 6 பேரையும் போலீஸார் கைது செய்ய வேண்டும். பெயிண்டிங் தொழிலை விரிவுபடுத்தத்தான் அவர் கந்துவட்டிக்கு கடனை வாங்கினார். ஆனால், எதிர்பார்த்த அளவு வேலை இல்லை. அவர், வாங்கிய கடனை இல்லன்னு சொல்லலை.இப்போ தொழில் இல்லை. கடன் தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். அதுவரை வட்டியைக் கட்டுறேன்னு, வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டிக்கொண்டுதான் வந்தார். ஆனாலும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கினார்கள். வீட்டுக்கு வந்து தினமும் அவதூறாகப் பேசினார்கள். கடைசியில் அடித்துக் கொன்றேவிட்டார்கள். அவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். ஆனா, சாகுலின் உயிர் கிடைக்குமா? இன்னைக்கு நடுத்தெருவுல நிக்குற அவன் குடும்பத்தை யார் காப்பாத்துவாங்க?" என்றனர் வேதனையுடன்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம்,ஏரலில் கந்துவட்டி பிரச்னையில் ஒருவர் இறந்திருப்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.பொதுமக்கள் கந்துவட்டி வசூல் செய்வது குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ புகார் செய்ய வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த சாகுல் ஹமீது குடும்பத்துக்கு அரசின் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.