Police Department News

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 6,000 போலீஸார் குவிப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 6,000 போலீஸார் குவிப்பு

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறியுள்ளார்.

ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். அதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பரமக்குடி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள், 5 ட்ரோன் கேமராக்கள் மூலமும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே பரமக்குடி வந்து செல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில், தென் மண்டல ஐஜி மற்றும் 3 டிஐஜிக்கள், 20 எஸ்பிகள், 26 கூடுதல் எஸ்பிகள் என 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆனந்த் சின்கா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.