புளியரை சோதனை சாவடியில் கலெக்டர்- எஸ்.பி. ஆய்வு
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதனை தடுத்து கட்டுப்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி, தென்காசி, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களின் எல்லையில் தீவிரமாக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு திருச்சி பறக்கும் படை உதவி இயக்குனர் அருள்முருகன் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு மேலாக அதிகாலை முதல் புளியரை சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் புளியரை சோதனைச் சாவடிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் வந்தனர். பின்னர் அங்கு கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதில்லை. இங்கு 39 குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து விதிகளுக்குட்பட்டு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு சில வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக கனிம வளங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப் பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.