பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்ட யோகா மாஸ்டர் அடித்துக் கொலை: கிணற்றில் சடலம் வீச்சு, கணவன், மனைவி கைது
பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்டதால் யோகா மாஸ்டரை அடித்துக் கொன்று, கிணற்றில் சடலத்தை வீசிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (45). கராத்தே மற்றும் யோகா மாஸ்டரான இவர், செம்மஞ்சேரி பூங்காவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்தார்.
கடந்த 13ம் தேதி வெளியே சென்ற இவர், வீடு திரும்பாததால் இவரது மகன் அஜய் (20), கானத்தூர் காவல் நிலையத்தில், தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் யோகா பயிற்சியாளர் லோகநாதன் செல்போன் எண்ணை வைத்து, கடைசியாக அவரிடம் யார் பேசியது என விசாரணை செய்துள்ளனர்.
அதில், செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (36) என்பவரிடம் அவர் கடைசியாக பேசியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் சுரேஷ் (38) ஆகியோரை பிடித்து, விசாரணை மேற்கொண்டனர்.
அதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சுரேஷ், தனது மனைவி கஸ்தூரியுடன் தாழம்பூர் அருகே உள்ள காரணை பகுதியில் வசித்து வந்துள்ளார்.
அங்கிருந்து, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செம்மஞ்சேரி பகுதிக்கு குடிவந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோகநாதனிடம் கஸ்தூரி யோகா பயிற்சிக்காகவும், இவரது 7 வயது மகன் கராத்தே பயிற்சிக்காகவும் சேர்ந்தனர்.
யோகா பயிற்சியின்போது லோகநாதன் கஸ்தூரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கஸ்தூரி சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.
இதனையடுத்து லோகநாதன் கஸ்தூரியை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பயிற்சிக்கு வரும்படி வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி தனது கணவர் சுரேஷிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
கணவர் கூறியபடி செல்போனில் லோகநாதனை தொடர்பு கொண்ட கஸ்தூரி, உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறி அவரை தாழம்பூர் அருகே உள்ள காரணை பகுதிக்கு அழைத்துள்ளார்.
அதன்படி கடந்த 13ம் தேதி கஸ்தூரி கூறிய இடத்திற்கு லோகநாதன் வந்துள்ளார்.
அங்கு கஸ்தூரி மற்றும் அவரது கணவர் சுரேஷ் உள்ளிட்ட சிலர் இருந்துள்ளனர்.
அப்போது லோகநாதனுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கஸ்தூரி மற்றும் உடன் வந்தவர்கள் லோகநாதனை அடித்து கொலை செய்தனர்.
பின்னர் அங்குள்ள கிணற்றில் அவரது உடலை வீசிவிட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் அவர்கள் சென்றுள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சுரேஷ், கஸ்தூரி இருவரையும் நேற்று கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் உடந்தையாக இருந்தவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கிணற்றிலிருந்து லோகநாதனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.