Police Department News

அடுத்தடுத்த சோதனைகளில் ஆடு, வைக்கோல் வியாபாரிகளிடம் ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல்

அடுத்தடுத்த சோதனைகளில் ஆடு, வைக்கோல் வியாபாரிகளிடம் ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எதுவும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக திருச்சுழி, நரிக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜராம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது தெரிய வந்தது.

மேலும் அதிகாரிகளின் விசாரணையில், இரு வாகனத்தில் வந்த நபர் ஆத்திப்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி கதிர்வேல் (38) என்பதும், இவர் திருச்சுழி அருகேயுள்ள முத்தனேரி பகுதியில் ஆடு வாங்குவதற்காக அந்தப் பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், நரிக்குடி முக்கு ரோடு பகுதியில் வள்ளிநாயகம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நரிக்குடி-திருப்புவனம் சாலை சந்திப்பில் வந்த மினி லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.84 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

மேலும் மினி லாரியில் வந்தவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரை தாலுகா நரியூர் மேலபுத்தான் வீடு பகுதியை சேர்ந்த சுபாஷ் (25) என்பதும், இவர் வைக்கோல் வியாபாரி என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர் சம்பவத்தன்று காலை பரமக்குடி, பார்த்தி பனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வைக்கோல் கட்டுக்களை கொள்முதல் செய்வதற்காக ரொக்கப்பணத்தை கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணமாக கொண்டு சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டுமென தேர்தல் விதி உள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கோல் வியாபாரி சுபாஷ் கொண்டு சென்ற ரூ.84 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து அதனை திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.