புத்தாண்டு தினத்தன்று உயரதிகாரிகளை பார்க்க வர வேண்டாம், குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள் என காவல் துறை அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், மைக்கில்வழங்கிய அறிவுரை வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அரசு அலுவலர்கள் தங்களது உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும், உயரதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவரும் மரபாக உள்ளது. காவல் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்த நடைமுறை மரபில்இருந்து மாறுபடும் அதிகாரிகளும் இருக்கின்றனர். அந்த வகையில்,கடந்த டிச.31-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், மைக்கில் அறிவுரை வழங்கியுள்ளார்.
மைக்கில் அவர் பேசியதாவது: புத்தாண்டு தினத்துக்கு முதல் நாள் இரவு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 இடங்களில் வாகன சோதனை நடத்த ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதை காவல் துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று என்னையோ பிற அதிகாரிகளையோ யாரும் வந்து சந்திக்கவேண்டாம். யாரும் வந்து பார்க்க வேண்டாம் என நீங்களும் சொல்லி விடுங்கள். நான் சென்றுஅதிகாரிகளை பார்க்கப் போகிறேன் என யாரேனும் தெரிவித்தால், அது அவசியமில்லை என்று கூறி, அவர்களது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடச் சொல்லுங்கள்.
டெஸ்ட் வைப்பேன்
எனக்கு நேரம் இருக்கிறது, நான் சென்று அதிகாரிகளை பார்த்து வருகிறேன் என்று யாரேனும் கூறினால், முடிக்கப்படாத வழக்குகள் ஏராளமாக உள்ளன. அவற்றை முடிக்கச் சொல்லுங்கள். அதையும் மீறி யாரேனும் இங்கு வந்தால் நான் டெஸ்ட் வைப்பேன்.
எனவே, உயரதிகாரிகளை பார்க்க வேண்டும் என தலைமைக் காவலர்கள், காவலர்கள் வரக் கூடாது. அவர்களை, அவர்கள் வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள். உயரதிகாரிகளை பார்க்க வரும் நேரத்தை அவரவர் குடும்பத்தாருடன் செலவிட்டு புத்தாண்டைக் கொண்டாடச் சொல்லுங்கள்.
பாதுகாப்புப் பணிகள்
புத்தாண்டு தினத்தன்று மாலையிலேயே பாதுகாப்புப் பணிகள் இருக்கும் என்பதால், டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களை குடும்பத்தாருடன் இருப்பதற்கு கொஞ்சம் நேரம் வழங்குங்கள். இவ்வாறு எஸ்.பி. பேசியுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்.பி.யின் இந்த மைக் அறிவுறுத்தலானது காவல் துறை அதிகாரிகளிடம் மட்டுமல்லாமல் காவலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மைக் ஆடியோ, வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.