தேக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து குடோன் தரைமட்டம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. ஆலை செயல்படாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறையில் புதுஅப்பநேரி பகுதியைச் சேர்ந்த அட்சயராமானுஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. ஏ.வி.எம். என்ற பெயரில் செயல்படும் இந்த ஆலையில் 31 அறைகள் உள்ளது. அனைத்து வகை பட்டாசுகளும் தயாரிக்கும் வகையில் நாக்பூரில் பெற்ற உரிமம் உள்ளது.இந்த பட்டாசு ஆலையில் கடந்த தீபாவளிப்பண்டிகை வரையில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நடந்து வந்தது. இதில் 50- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தீபாவளிக்கு பின் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தற்போது வரை ஆலை செயல்படவில்லை.இந்நிலையில் தீபாவளிக்கு தயாரிக்கப்பட்ட பட்டாசில் விற்பனையாகாமல் தேங்கிய பேன்ஸி ரக பட்டாசுகளை 4- வது அறையில் பூட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று (05.01.2020) காலை எதிர்பாராத விதமாக அந்த அறையில் இருந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த அறை தரைமட்டமானது. இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து, மற்ற அறைகள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.பட்டாசு ஆலை செயல்படாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்