Police Department News

சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்று காரில் தப்பிய கும்பல்.

சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்று காரில் தப்பிய கும்பல்.

கன்னியாகுமரியில் காரில் வந்த கும்பல் சோதனைச்சாவடியில் இருந்த உதவி ஆய்வாளர் வில்சனுடன் வாக்குவாதம் செய்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. பரபரப்பான இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இரு மாநில எல்லை வழியாக செல்லும் வாகனங்களை சோதனையிட்டு அனுமதி வழங்கப்படும். இந்தச் சோதனை சாவடி படந்தாலுமூடு என்கிற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் இரவு(08/01) சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியிலிருந்தார். அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தார்.

மற்ற போலீஸார் சோதனைச்சாவடியின் உள்ளே இருந்தனர்.அப்போது கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ஸ்கார்பியோ வாகனம் ஒன்று வந்துள்ளது. அதை நிறுத்தி வில்சன் சோதனையிடும்போது திடீரென அதில் வந்தவர்கள் வில்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மார்பு, வயிறு, தொடையில் குண்டுப்பாய்ந்த வில்சன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் அங்கு ஓடிவந்துள்ளனர். அதற்குள் வில்சனை சுட்ட மர்ம நபர்கள் ஸ்கார்பியோ காரில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வில்சனை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி வில்சன் உயிரிழந்தார்.

காரில் வந்தவர்கள் கன்னியாகுமரிக்குள் சென்றுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டது தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கும் அளவுக்கு அவர்கள் எதையாவது கடத்தி வந்தார்களா? அல்லது சமீபத்தில் அப்பகுதியில் கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுக்களின் கூட்டாளிகளா? அல்லது வேறு ஏதேனும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற வாகனம் குறித்த தகவலை கன்னியாகுமரி மாவட்டம் முழுதும் உள்ள செக்போஸ்ட்டுகள், காவல் நிலையங்களுக்கு அளித்துள்ள போலீஸார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதனிடையே கொடூர கும்பல் வந்த வாகனம் ஸ்கார்பியோ என்கிற தகவல் இருந்தாலும் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்துப்பார்த்தபோது அது வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஒட்டன் சத்திரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அது மாருதி சுசுகி வாகனம் என பதிவாகியுள்ளதால், அவர்கள் பொய்யான வாகன நெம்பர் பிளேட்டை உபயோகப்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.

சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமரா பதிவு உள்ளதா என போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சமீப ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவம் எதுவும் இவ்வாறு நடந்தது இல்லை.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published.