Police Department News

தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம்; முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!

தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம்; முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!
கிருஷ்ணகிரி அருகே, தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த வேன் ஓட்டுநரை பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). வேன் ஓட்டுநர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். வெள்ளிக்கிழமை (ஜன. 17) காலை, அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் சடலமாகக் கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர், மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், மாரித்துவுக்கும், கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தீர்த்தச் செல்வன் (55) என்பவரின் மனைவி ஈஸ்வரி (37) என்பவருக்கும் இடையே ‘தவறான தொடர்பு’ இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ‘நெருக்கமாக’ இருந்துள்ளனர்.இதையறிந்த தீர்த்தச்செல்வன், தனது மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு கண்டித்துள்ளார். ஆனாலும், ஈஸ்வரியை அடிக்கடி மாரிமுத்து சந்தித்து வந்துள்ளார்.இதுபற்றி தீர்த்தச்செல்வன், தாளாப்பள்ளியைச் சேர்ந்த தனது நண்பரும், கட்டடத் தொழிலாளியுமான கோவிந்தராஜ் (35) என்பவரிடம் கூறியுள்ளார். தனது மனைவியுடன் மாரிமுத்து தவறான தொடர்பு வைத்திருப்பதால் ஊரில் தலைகாட்ட முடியவில்லை என்று புலம்பியதுடன், அவரை தீர்த்துக் கட்டினால்தான் நிம்மதி அடைவேன் என்றும் சொல்லி இருக்கிறார்.இதையடுத்து, மாரிமுத்துவை கொலை செய்ய கோவிந்தராஜ் திட்டம் தீட்டியுள்ளார். ஜனவரி 16ம் தேதி, கேசவன் (27) என்பவர் மூலம் மாரிமுத்துவை ஏரிக்கரை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கே மாரிமுத்து, அவருடைய மாமா எல்லப்பன், நண்பர் ராஜ்குமார், கேசவன் ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த இடத்திற்குச் சென்ற கோவிந்தராஜ், தீர்த்தச்செல்வனின் மனைவியுடனான தொடர்பை விட்டுவிட்டு இந்த ஊரை விட்டு ஓடாவிட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இருவரையும் மாரிமுத்துவின் உடன் இருந்தவர்கள் சமாதானப்படுத்திவிட்டு, மாரிமுத்துவை மட்டும் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனாலும், நண்பனின் மன நிம்மதிக்காக மாரிமுத்துவைக் கொல்ல திட்டமிட்டிருந்த கோவிந்தராஜ், கீழே கிடந்த பாறாங்கல்லை எடுத்து மாரிமுத்துவின் தலைமீது போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் தீர்த்தச்செல்வன், கட்டடத் தொழிலாளி கோவிந்தராஜ், அவர்களுடைய கூட்டாளி கேசவன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜன. 17) இரவு கைது செய்தனர். மூவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.