காஞ்சிபுரத்தில் காவல் துறை மூலம் பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட பள்ளிப் படிப்பை நிறுத்தும் சிறுவர்கள், பள்ளி செல்லா சிறுவர்களை ரவுடிகள் சிலர் தங்கள் குழுக்களில் இணைத்துக்கொள்கின்றனர். இதனைத் தடுக்க பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழு மூலம் அவர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படலாம்.
அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்துதல், பள்ளிக்கு அனுப்புதல் போன்ற உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த குழுவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் என்னை அணுகலாம்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் போலீஸ் நண்பர்கள் குழுவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். போக்குவரத்தை சரி செய்தல், கோயில்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த மாணவர்களை நாங்கள் பயன்படுத்த உள்ளோம். இதில் சேர விரும்பும் இளைஞர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து பிரச்சினை, ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா விற்பனை உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் வந்துள்ளன. இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். ரவுடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது வரை 74 ரவுடிகளை கைது செய்துள்ளோம். காஞ்சிபுரத்தின் முக்கிய ரவுடியான தணிகாவை பிடிக்கவும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
கோயில்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளோம். அந்த பாதுகாப்பு இன்னும் சில தினங்களுக்கு தொடரும். கோயிலுக்கு வந்தவர்கள் யார் என்பது குறித்த விவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை என்றார்.