காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னையிலுள்ள இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் ஆளிநர்கள் எனமொத்தம் 10,000 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் சிறப்புடன் பணியாற்றினர்.
17.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் மக்கள் கூடினர். அப்போது எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை)
மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள கடற்கரை சாலை, மற்றும் அதை ஒட்டியுள்ள மணற்பரப்பு உள்ளிட்ட இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காவல் அதிகாரிகள் தலைமையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டது.
உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140க்கும் நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
கடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக உயர்கோபுரங்கள் மற்றும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டனர், அவர்களுக்கு கையடக்க வான் தந்தி கருவி (வாக்கி டாக்கி), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு வாட்சப் குழு அமைக்கப்பட்டது.
மேலும், 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் 3 பறக்கும் பொம்மை (Drone) கேமராக்கள் பொருத்தப்பட்டது. அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்பட்டது.
அன்றைய தினம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காவல் ஆளிநர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குதிரைப்படையுடன் கூடுலாக 16 குதிரைகள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 7 All Terrain Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.
சிறிய அளவிலான நான்கு சக்கர வாகனங்களில் (Elevator Vehicle Picket) காவல் ஆளிநர்கள் மூலம் ஒலி பெருக்கியில் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 10 நபர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 4 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும், குதிரைப்படை மற்றும் 2 All Terrain Vehicle, மூலமும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலமும் கண்காணித்து ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 11 காவல் உதவி மையங்கள் மற்றும் எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல் கட்டுப்பாட்டறையில் வைக்கப்பட்டது. கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள்(Amusement Park), வணிக வளாகங்கள், மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மேற்குறிப்பிட்ட இடங்களில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப., (வடக்கு), திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப.(தெற்கு) மற்றும் திரு.ஏ.அருண், இ.கா.ப. (போக்குவரத்து) ஆகியோரது அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் 5,000 காவல் ஆளிநர்களும், இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் ஆளிநர்களும் என மொத்தம் 10 ஆயிரம் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் 17.01.2020 நேற்று காணும் பொங்கல் அன்று இரவு சென்னை கடற்கரை காந்தி சிலை முன்பு பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்தும், அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும், அங்கு பணியிலிருந்த காவலர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.







