Police Department News

சசிகுமார் கொலையில் தேடபட்ட குற்றவாளி கைது பழிக்குப்பழியாக செய்ததாக பரபரப்பு தகவல்

கோயம்புத்தூர்: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த முபாரக் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜன.9-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்(36). இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி துடியலூர் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பையும், வன்முறையையும் ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த வழக்கு துடியலூர் காவல்துறையினரிடம் இருந்து, சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடையதாக சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதாம், முபாரக் என்ற இருவரது புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறையினர் தேடி வந்தனர். இருவரைப் பற்றிய தகவல் கொடுப்போருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

இதனிடையே, சையது அபுதாஹ_ர்(30) என்பவரை கைது செய்து விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர், ஆக.1-ம் தேதி தலைமறைவாக இருந்த சதாமை(27) கோவை கருமத்தம்பட்டி பகுதியில்கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த சுபையர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

உக்கடம் கழிவுநீர் பண்ணையில் 8 நாட்கள் நடந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு அக்.28-ல் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்கப்பட்டது. முபாரக் மட்டும் பிடிபடாமல் இருந்தார்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் பகுதியில் தனது குடும்பத்தினரை சந்திக்க வந்த முபாரக்கை(38) சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்து,கோவை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அவரை நேற்று ஆஜர்படுத்தினர். நீதிபதி, ஜன.9-ம் தேதி வரை முபாரக்கை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து காவல் தரப்பில் கூறும்போது, ‘கணபதிபுதூரைச் சேர்ந்த ஹக்கீம் என்ற இளைஞர் கோஷ்டி மோதலில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்துக்கு பழிவாங்குவதற்காகவே சசிகுமார் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.