கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த, பல்வேறு வகையான, 74 பாம்புகளை, வனத் துறையினர் பிடித்து, காப்புக் காட்டில் விட்டனர்.
கிருஷ்ணகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தட்டக்கல், காவேரிப்பட்டணம், பர்கூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், நாகப் பாம்புகள், மலைப்பாம்புகள் புகுந்ததாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத் துறையினர், ஒன்பது மலைப்பாம்புகள், ஒரு கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர்.
கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர், நாகேஷ் கூறியதாவது:
குடியிருப்பு பகுதிகளில், பாம்புகள் புகுந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து, வனத்துறை அலுவலர்கள் அங்கு சென்று, அவற்றை பிடித்தனர்.
நவம்பர் மற்றும் டிசம்பரில் தற்போது வரை, 74 பாம்புகளும், ஒரு உடும்பு மற்றும், 47 குரங்குகளும் பிடிக்கப்பட்டன. இவை, பர்கூர், வரட்டனப்பள்ளி மற்றும் நாரலப்பள்ளி காப்புக் காடுகளில் விடப்பட்டன.
பாம்புகள் ஊருக்குள்ளோ, குடியிருப்புகளிலோ, விவசாய நிலங்களிலோ இருந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதை பாதுகாப்பாக பிடித்து காட்டில் விட, நடவடிக்கை எடுக்கப்படும். பாம்புகளை அடித்து துன்புறுத்துவதோ, கொல்வதோ குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார்.