இந்திய குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து கொள்ள சென்னைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தலைமையில் ஜன.26 அன்று புதுடில்லியில் நடைபெறுகின்ற 69-வது குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்க சைதாப்பேட்டையில் உள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி டி.ராமலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. குடியரசு தினமான ஜன.26 அன்று காலை நடக்கும் ராணுவ அணிவகுப்பு, போலீஸ், சிஆர்பிஎப், துணை ராணுவப்படை, என்சிசி, சாரணர், அரசின் பல்வேறு துறைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இதைக்காண ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதமர்கள், ஜனாதிபதிகள் என அனைவரும் வருவர்.
இந்த அணிவகுப்பில் கலந்துக்கொள்வது ஒவ்வொரு வீரரின் கனவு. என்சிசியிலும் இதற்காக இந்தியா முழுதுமிருந்து மாணவ மாணவியர் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதன் முறையாக சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
ராமலட்சுமி தேசிய மாணவர் படையில் (NCC) பயிற்சி பெற்று வருகிறார். தமிழகத்தில் இருந்து இவ்வணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கின்ற 7 மாணவிகளில் இவரும் ஒருவர். மேலும் மற்ற 6 மாணவிகள் கல்லூரியில் பயின்று கொண்டு இருப்பவர்கள்.
மாணவி ராமலட்சுமி அவர்கள் மட்டும் சென்னைப் பள்ளி அளவில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.