திருப்பூர் , பல்லடத்தில் செல்போன் விற்பனை கடையில் செல்போன்களை திருடியதாக ஒருவன் கைது ,
பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அங்காளம்மன் கோயில் அருகில் தனியார் செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் விற்பனை கடையில் கடந்த 16ம் தேதி இரவு கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.30ஆயிரத்திற்கும் மேற்பட்ட 30 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் பல்லடம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீஸார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோவை மாவட்டம் சூலூரை நேரு நகரை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபராக் அலி (27) என்பதும் பல்லடத்தில் உள்ள செல்லிடைப்பேசி கடையில் திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த அபிலாஸ் (25) கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூரில் இரண்டு சக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முபராக் அலியின் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 25 செல்போன்களையும், அபிலாஸ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். முபராக் அலி, அபிலாஸ் இருவரும் திருட்டை ஒரு தொழிலாகவே கருதி கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் மீது கோவை,திருப்பூர் மாவட்டங்களில் 28 பல்வேறு திருட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.