Police Department News

மதுரையில் பயங்கரம் பழிக்குபழியாக ரவுடியை வெட்டி கொலை செய்த கும்பல்

மதுரை: மதுரை முனிச்சாலை, இஸ்மாயில்புரம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் மகன் ரபீக் ராஜா என்ற வாழைக்காய் ரபீக்(41), ஜவுளி வியாபாரி. இவர் மீது வெடிகுண்டு வழக்கு, கொலை வழக்கு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்பேட்டையைச் சேர்ந்த மன்னர் மைதீன், அவரது அண்ணன் மகன் முகமதுயாசின் ஆகியோரை ரபீக் ராஜா கொலை செய்தார். எனவே மன்னர் மைதீனின் உறவினர்கள் ரபீக் ராஜாவை கொலை செய்ய நேரம் பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் ரபீக்ராஜா கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் செலவுக்காக அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களிடம் மாமூல் வசூலித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரபீக் ராஜா, தனது நண்பர் மருதுபாண்டியனுடன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் இருவரும் வீட்டின் சந்தில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் திடீரென்று வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரபீக்ராஜாவும், அவரது நண்பரும் அந்த பகுதியை நோக்கி சென்றனர்.

அந்த நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் அந்தக் கும்பல் விரட்டிச் சென்று ரபீக் ராஜாவை மட்டும் தனியாக பிடித்து சரமாரியாக வெட்டியது. மருதுபாண்டியன் வேறு பாதை வழியாக தப்பிச் சென்று உயிர் பிழைத்தார்.

சத்தம் கேட்டு ரபீக் ராஜாவின் மனைவி சைபு நிஷா வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அங்கு ரபீக் ராஜாவை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு அலறி துடித்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. பின்னர் ரபீக் ராஜா ரத்த வெள்ளத்தில் இறந்தார். அவரது உடல் அருகே ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக அப்துல்லா, சையது முகம்மது, முனாப், சையது இப்ராகிம் ஆகிய 4 கொலையாளிகளை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.