மதுரை: மதுரை மாநகர் B3-தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முனிச்சாலை, இஸ்மாயில்புரம் 7வது தெருவில், ரபீக் ராஜா என்ற வாழைக்காய் ரபீக் (41) என்பவர் அவரது வீட்டின் அருகே வைத்து 03.01.2018 அன்று அவரது மனைவி சைபுநிஷா முன்பு அடையாளம் தெரிந்த நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி சைபுநிஷா (35) என்பவர் அளித்த புகாரின்பேரில் டB3-தெப்பக்குளம் காவல் நிலையத்தின் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS., அவர்களது உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திரு.சசிமோகன்,IPS., அவர்கள் ஆலோசனையின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, இவ்வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில், நேற்று 04.01.2018, மேற்படி கொலை வழக்கின் எதிரிகள் 1) அப்துல்லா 2) சையது முகம்மது 3) முனாப் 4) சையது இப்ராஹீம் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் ரபீக் ராஜா என்ற வாழைக்காய் ரபீக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேற்படி எதிரிகள் நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய நான்கு கத்திகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி எதிரிகளை கொலை சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்த தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.