தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்கள் மூலம் செல்போன்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான 102 செல்போன்களை மீட்டனர்.
ஒப்படைப்பு
இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விவரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விவரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைந்து விட்டால், அது ஒருவேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்தால், அதை அவர்கள் சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும்.
ஹெல்மெட்
மேலும் இருசக்கர வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் ஹெல்மெட் அணியாமல் தலையில் அடிபட்டு இறந்தவர்கள்தான். ஆகவே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துகளை தவிர்க்க வேண்டும்.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆகவே அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்