Police Department News

CD மணி கூட்டாளிகளால் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல்?

போலீசாரால் தேடப்பட்டு வரும் தென் சென்னையின் பிரபல ரவுடி C.D. மணியின் கூட்டாளிகளால், தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் செல்போனில் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளரான கிரி, இரு தினங்களுக்கு முன், குற்றவழக்கு ஒன்றில் கணேசன் என்பவரிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, கணேசனின் தம்பியும், CD மணி என்ற ரவுடியின் கூட்டாளியுமான தவக்களை பிரகாஷ் என்பவன், ஆய்வாளர் கிரியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தன் அண்ணனையே கைது செய்யும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா என மிரட்டல் விடுத்த ரவுடி பிரகாஷ், சமீபத்தில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், காவல் ஆய்வாளர் கிரிக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதேபோன்று மேலும் சில ரவுடிகளும் ஆய்வாளரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. காவல் ஆய்வாளரை ரவுடி மிரட்டியதாக எழுந்த சம்பவம் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, ரவுடி CD மணியையும் அவனது கூட்டாளியையும் தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். தென் சென்னையில் கடந்த 10 வருடங்களாக தமது சாம்ராஜ்யத்தை இன்னும் அசைக்க முடியாமல் வைத்துள்ள பிரபல ரவுடியான CD மணி மீது ஏராளமான நில அபகரிப்பு மற்றும் கொலை வழக்குகள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் ஜெகன்நாதன் என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றதாகவும் CD மணி மீது குற்றம்சாட்டப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அவனை பல குற்றவழக்குகளில் போலீசார் தேடிவந்த நிலையில், தற்போது மீண்டும் தமது செயல்பாட்டை கூட்டாளிகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளான். சமீபத்தில் 75 ரவுடிகளை மொத்தமாக கைது செய்து ரவுடிகளை ஒடுக்கிய சென்னை காவல்துறைக்கே சவால் விடும் வகையில் CD மணியின் கூட்டாளிகள் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.