மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை
மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம், C2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதுரை பைகரா இ.பி.காலனி 7 வது தெரு, பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது.44, இவருடைய மனைவி காளீஸ்வரி. முருகன் மதுரை வாடிப்பட்டி பகுதியில் உள்ள டிராக்டர் நிறுனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக காளீஸ்வரி வீட்டை விட்டு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரி பின்பக்கமாக சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து காளீஸ்வரி அளித்த தகவலின் பேரில் சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் துறை நிபுணர்கள் , திருடர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு துணை ஆணையர் திரு. பழனிக்குமார் அவர்களின் தலைமையில் போலீசார் வந்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் முருகனின் மனைவி காளீஸ்வரி தங்கள் வீட்டில் 150 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் ஆறு லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாக போலீசில் தெரிவித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.