Police Department News

நோயுற்ற குழந்தையைப் பார்க்க லீவு கிடையாது; என்ன பிழைப்பு இது? கண்ணீருடன் பேசும் காவலர்: வைரலாகும் வீடியோ

தனது காலுடைந்த குழந்தையை பார்க்க லீவு தர மறுக்கும் அதிகாரி பற்றி கண்ணீர் வழிய பேசும் கான்ஸ்டபிள் ஒருவரின் முகநூல் பதிவு வீடியோ வைரலாகி வருகிறது. என்ன பிழைப்பு இது எதாவது பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமோனி இதற்கு முன்னர் வேறொரு மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு காவலரை நேரில் சென்று கட்டி அணைத்து அவரை தேற்றி ஆறுதல் சொல்லி எதுவானாலும் இனி நீ என்னிடம் சொல்ல வேண்டும் என்று கூறி கார் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி ஒருவாரம் ஓய்வெடுத்துவிட்டு வா என்று அனுப்பி வைத்த நிகழ்வு உண்டு.

இது போன்ற அதிகாரிகள் காவல்துறையில் உண்டு. தனக்கு கீழ் பணியாற்றுபவனும் மனிதன் தான், அவனுக்கும் குடும்பம், பிள்ளை பாசம் எல்லாம் உண்டு என்று கொஞ்சம் சிந்தித்தால் அவர்கள் துயரம் கண்ணுக்கு தெரியும். அதை காது கொடுத்து கேட்டாலே வாழ்நாள் முழுதும் அர்பணிப்புடன் பணியாற்றுவார்கள். ஆனால் கேட்காமல் போவதும், அலட்சியம் காட்டுவதும், மனிதாபிமானமற்று நடப்பதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேறு முடிவை தேடிக்கொள்கின்றனர்.

ஒரே வாரத்தில் இரண்டு காவலர்கள் காரணம் தெரியாமலே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டது சென்னை போலீஸாரை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கரணையில் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த காவலர் பாரதி(31) என்பவர் உருக்கமாக தனது நிலையை கண்ணீர் விட்டபடி பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.

அதில் காவல்துறையில் சேர்ந்து பத்தாண்டுகள் சந்தோஷமாக மன நிறைவுடன் பணியாற்றிவிட்டேன், சமீபத்தில் எனது மகன் கீழே விழுந்து காலில் அடிபட்டதில் காலில் சீழ் கோர்த்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு ஆளானான். அவனுக்கு அறுவை சிகச்சை செய்ய வேண்டும், அப்பாவை தேடுகிறான் நீங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று மனைவி கூறினார்.

ஆபரேஷன் எப்போது என்றேன் அடுத்த வாரம் என்றார். அடுத்த வாரம் தானே லீவு வாங்கிவிட்டு வருகிறேன் என்றேன், ஆபரேஷன் நாளும் வந்தது. அதற்கு முன் பள்ளிக்கரணை ஆய்வாளரிடம் சென்று லீவு கேட்டேன். எனது மகன் சின்ன பையன் 4 வயது தான் ஆகிறது ஆபரேஷன் என்பதால் அப்பாவை தேடுகிறான், லீவு கொடுத்தால் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவேன் என்றேன்.

ஆனால் இன்ஸ்பெக்டர் உன்னை நம்ப முடியாது லீவு இல்லை என்று சொல்லிவிட்டார். வேண்டுமானால் டாக்டர் போனை போட்டு தருகிறேன் சார் கேட்டுக்கொள்ளுங்கள் என்றேன், முடியாது என்று சொல்லிவிட்டார், அதன் பின்னர் உதவி ஆணையரிடம் சென்று நிலைமை சொல்லி லீவு கேட்டேன், அவர் இரண்டு நாளைக்கு மேல் இல்லை என்று சொல்லிவிட்டார். போக வர பயணமே ஒருநாள் முடிந்துவிடும் குழந்தைக்கு ஆபரேஷன் ஒரு நான்கைந்து நாள் பக்கத்தில் இருந்தால் சிறுவன் தைரியமாக இருப்பான் என்று சொன்னேன்.

ஆனால் அவரும் மறுத்துவிட்டார். இதற்கிடையே ஆபரேஷன் போகும் முன் எனது மகன் என்னிடம் பேசினான், “அப்பா வர மாட்டீர்களா? உங்களை பார்க்கவேண்டும் போல் இருக்கு, என் மேல் பாசமே இல்லையா?” என்று கேட்டது என் நெஞ்சையே பிழிந்தது. கண்களில் கண்ணீர் வழிய “அப்படி எல்லாம் இல்லை கண்ணா, அப்பா லீவு கிடைத்ததும் உடனே வந்துவிடுகிறேன்” என்று சொன்னேன்.

பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துணை ஆணையரையே போய் பார்த்தேன். லீவு பிரச்சனைக்கெல்லாம் இங்கு வரக்கூடாது போ, போ என்று விரட்டிவிட்டார்கள். எனக்கு வேறு வழியே தெரியவில்லை. ஆனது ஆகட்டும் என்று ஊருக்கு கிளம்பி போய்விட்டேன். மகனை பார்த்து அவனுக்கு சிகிச்சை எல்லாம் முடிந்த பின்னர் 10 நாள் கழித்து வந்து டூட்டியில் ஜாயிண்ட் பண்ண வந்தேன்.

ஆனால் என்னை இணைக்க கூடாது என்று உத்தரவு என்றார்கள். என்னடா இது வாழ்க்கை, பணம் சம்பாதிக்க பிழைக்கத்தான் இந்த பணிக்கு வந்தோம். இப்படி மன உளைச்சலை உருவாக்கி குடும்பத்தாரைக்கூட பார்க்க முடியாத நிலைக்கு ஏன் பிழைக்க வேண்டும். தற்கொலை செய்துக்கொள்ளலாமா என்று கூட யோசித்தேன், வாழ்க்கையில் பிழைக்க வழியா இல்லை, பேசாமல் ஊரைப்பார்க்க போய் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்கிறேன், அல்லது சூர்யா படத்தில் சொல்வது போல் மளிகை கடை வைத்தாவது பிழைத்துக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

இது குறித்து ஸ்டேஷன் வட்டாரத்தில் விசாரித்தபோது காவலர் பாரதி மீது பெரிதாக யாரும் குற்றம் சொல்லவில்லை. பாரதி செய்த தவறு லீவு போட்டுச்சென்ற பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லவில்லை என்கிறார்கள். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரை விட உதவி ஆணையர் தான் பிரச்சனை, இதே போன்று இதே ஸ்டேஷனில் ஜான் பாஸ்கோ என்ற காவலருக்கும் விடுப்பு தராமல் ஏசி கடுமையாக நடந்துக்கொண்டதால் அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க ஸ்டேஷனை விட்டே ஜான் பாஸ்கோவை டிரான்ஸ்பர் செய்யும் நிலையில் இருப்பதாக அங்குள்ள போலீஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற நிலையில் தான் காவலர்கள் தங்கள் குறைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல், நண்பர்களுடனும் பகிர்ந்துக்கொள்ள முடியாமல் மன உளைச்சலில் திடீர் என்று முடிவெடுத்து வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர் என்று ஒரு மூத்த தலைமை காவலர் வேதனையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.