காவல் துறை அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டும் ரத யாத்திரை நடத்திக்கொள்ளலாம், உயர் நீதி மன்றம் அனுமதி
காவல் துறையினர் அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் மட்டும் நாளை முதல் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த உயர் நீதி மன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் உதவி ஆணையர் தரப்பில் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரயை நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலும் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி, மற்றும் கட்சி சாரா நிறுவனங்களின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்கு, அனுமதி வழங்க வேண்டாம், என்பதை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போது, மகாராஷ்ரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் இது போன்ற யாத்திரைக்கு அனுமதி வழங்குவது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரத யாத்திரை போன்ற பெரிய அளவிலான கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது ஏற்க்கதக்கதல்ல, ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த கேஷ்திர டிரஸ்ட் என்னும் பெயரில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் பாஜக மற்றும் பல இந்து முன்னணி நிறுவனங்களின் தலையீடும் உள்ளது, என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ்ஆனந்தி அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும் பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் 3 நாட்கள் நடத்திக்கொள்ள அனுமதிக்கலாம். என தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதிகள் காவல் துறையினர் அனுமதித்த வழித்தடத்தில் மட்டும் நாளை முதல் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்தி கொள்ள அனுமதி வழங்கினர்