போலீசாருக்கு விடுமுறை இல்லை, காவல்துறை உத்தரவு
தமிழக சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6 ல் நடைபெற உள்ளது, இத்தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம், மனுத்தாக்கள் உட்பட பல் வேறு நடவடிக்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஒரே நேரத்தில் பல் வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை ஆரம்பிக்க உள்ள நிலையில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசரம், அவசியம் கருதியும் துக்க நிகழ்ச்சிக்காக மட்டும் போலீசார் விடுமுறை எடுக்க முடியும். அதற்கான காரணம், மற்றும் ஆவணங்கள் மூலம் மட்டுமே போலீசார் அந்த விடுமுறையை எடுக்க முடியும் என போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.