சொகுசு காரில் அழைத்து சென்று சிறுவனை மகிழ்வித்த போலீஸ் அதிகாரிகள்.
துபாய்:
துபாயில் வசிக்கும் ஆசிய நாட்டை சேர்ந்த சிறுவன் லூகாஸ் லி சாவோஸ் (வயது 9). இந்த சிறுவனுக்கு போலீஸ் சொகுசு ரோந்து காரில் வலம் வர வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது. இதை அந்த சிறுவனின் தந்தை போலீசாருக்கு இ-மெயிலில் தெரியப்படுத்தினார். இதை பார்த்த போலீஸ்துறையின் சுற்றுலா மற்றும் ஊடக பிரிவின் அதிகாரிகள் திடீரென்று சிறுவனின் வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர்.
அப்போது அவர்கள் கையோடு விளையாட்டு பொருட்களை கொண்டு சென்றனர். இதில், அந்த பிரிவின் அதிகாரிகள் மற்றும் போலீஸ் கார்ட்டூன் கதாபாத்திரம் (அம்னா) போன்று வேடம் அணிந்த அதிகாரி ஆகியோர் சிறுவனிடம் அன்பாக பேசினர். பின்னர் அந்த சிறுவனுக்காக பிரத்தியேகமாக தைக்கப்பட்ட சீருடையை அணிவித்தனர். அந்த சிறுவனும் ஆர்வமாக அணிந்துகொண்டான்.
பிறகு ரோந்து பிரிவில் பயன்படுத்தப்படும் சொகுசு காரில் அந்த சிறுவனை அமர வைத்து அவனது வீட்டு பகுதியில் உள்ள சாலையில் அழைத்து சென்றனர். இதையடுத்து சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீஸ் அதிகாரிகளுக்கு பெற்றோர் மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.