என்னை முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என்று சவால் விட்ட பிரபல ரவுடியை மடக்கிப் பிடித்த பழநி போலீசார்.
பழநியில் 10 லட்சம் பணம் கேட்டு தேங்காய் வியாபாரியை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பூபாலன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக பூபாலன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு 10 லட்சம் பணம் கேட்டு தேங்காய் வியாபாரியை கடத்தி உள்ளான். அதனடிப்படையில்
பழநி போலீசார் அவனைத் தேடி வந்த நிலையில் போலீசாரிடம், என்னை முடிந்தால் புடித்துப் பாருங்கள் என்று போனில் தொடர்பு கொண்டு வீர வசனம் பேசியுள்ளான்.
இந்நிலையில் இவனை பிடிக்க பழநி காவல் துணை கண்காணிப்பாளர் சிவா தலைமையில், சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர் நிர்மல்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் பூபாலனைத் தேடி வந்தனர்.
இவனை பழநி, திருப்பூர், உடுமலை மற்றும் திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் இவனைத் தேடி வந்த நிலையில் இவன் காவல்துறையினர் கண்ணில் படாமல் தப்பித்து வாழ்ந்து வந்துள்ளான். மேலும் இவனுடைய தொலைபேசி அழைப்பை வைத்து இவனை பிடிக்க நினைத்த காவலர்கள் இவன் புதிதாகப் பயன்படுத்தும் செல்போன் நம்பரை கண்டுபிடித்து அதனை பின் தொடர்ந்தனர்.
ஆனால் பூபாலன் அவனுடைய வாட்ஸ்அப் அழைப்பு, மெசஞ்சர் அழைப்பு போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி மற்றவர்களை தொடர்பு கொண்டு வந்துள்ளான். இதனால் அவன் மறைந்து வாழும் இடத்தை கண்டுபிடிப்பது காவலர்களுக்கு சிரமமாக இருந்தது.
ஆனால் காவலர்களின் அயராத உழைப்பினால் இவன் கேரளா எல்லைப் பகுதியில் சுற்றித் திரிவதாகவும் அடிக்கடி கோவை மற்றும் பழநி சென்று வருவதாகவும் கண்டுபிடித்தனர்.
மேலும் அவன் பயன்படுத்திய செல்போன் நம்பரில் வைபை(WIFI) எந்த ஊரில், எந்த முகவரியில் தொடர்பில் உள்ளது என்பதை வைத்து இவன் இருக்கும் இடத்தை உறுதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இசக்கி ராஜா தலைமையில் கோயமுத்தூர் மற்றும் கேரள எல்லைப்பகுதியில் இவனை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த விஷயத்தை எவ்வாறோ தெரிந்து கொண்ட பூபாலன் அங்கிருந்து பழநிக்கு கிளம்பி வந்து விடுகிறான்.
முன்னதாக இசக்கிராஜா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் பூபாலன் பழநியில் இருக்கும் விஷயத்தை அறிந்துகொண்டு பழநியில் இவனை பிடிக்க விரைந்தனர்.
பூபாலன் இருக்குமிடத்தை இவர்கள் நெருங்கியவுடன் இவர்களிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓட தொடங்கினான். இவனை எவ்வாறாவது பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா பாணியில் இசக்கிராஜாவும், நிர்மல் குமாரும் இவனைப் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று அவனை மடக்கிப் பிடித்தனர்.
இவ்வாறு காவல்துறைக்கு சவாலாக விளங்கிய ரவுடி பூபாலனை, மிகவும் சிரமப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தி, தங்கள் உயிரையும் பணயம் வைத்து, பல நாட்களாக தூங்காமல் கண் விழித்து சினிமா பாணியில் அவனை வளைத்து பிடித்த சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர் நிர்மல்குமார் மற்றும் பாலமுருகன் அடங்கிய தனிப்படையை உயர் அதிகாரிகளும், பொதுமக்கள வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
இப்படிப்பட்ட காவலர்களால் காவல்துறைக்கும், நாட்டிற்கும் பெருமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.