Police Recruitment

போதையில் சிக்கிய கூட்டாளி; விடுவிக்க வந்த போலி பெண் எஸ்ஐ! – சிதம்பரம் டிஎஸ்பி தீவிர விசாரணை


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிதம்பரம் மந்தகரை காமாட்சிம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் சக்கரபாணி என்பவர், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீஸார் சக்கரபாணியைக் கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், 31.10.2019 காலை சப்-இன்ஸ்பெக்டர் உடையில் காவல் நிலையம் வந்த பெண் ஒருவர், கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருவதாகவும் கூறி சக்கரபாணியை விடுக்கக் கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணை சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர். அவர் நடத்திய விசாரணையில், அவர் போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பதும், அவர் சிதம்பரம் மந்தகரை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி சூர்ய பிரியா (27) என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் சப்-இன்ஸ்பெக்டர் உடையணிந்து போலீஸார், கிராம நிர்வாக அலுவலர், பஸ்சில் ஓசி பயணம் எனப் பலரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சூர்யபிரியாவுக்கு உடந்தையாக இருந்த அவரின் கணவர் ராஜதுரை, சக்கரபாணி ஆகியோரைக் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சூர்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உடையில் கடலூர் மாவட்டத்தில் யார் யாரை ஏமாற்றினார், என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.

ச.அரவிந்தசாமிபோலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.