மும்பையில் தடுப்பூசி மோசடி 5 லட்சம் சுருட்டிய 4 பேர் கும்பல் கைது
மும்பை: மும்பையில் தடுப்பூசி முகாம் நடத்தி மோசடி செய்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். காந்திவலி மேற்கு பொய்சரில் ஹிராநந்தனி ஹெரிடேஜ் ஹவுசிங் சொசைட்டி உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 30ம் தேதி தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக பிரபல மருத்துவமனையை சேர்ந்த ஒருவரிடம் பேசி ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் 390 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவேக்சின் தடுப்பூசி போடுவதாகவும் ஒரு ஊசிக்கு 1,260 வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு சுமார் 5 லட்சத்தை தடுப்பூசி முகாம் நடத்தியவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை. இது குறித்து முகாம் நடத்தியவர்களிடம் கேட்டபோது, 3 நாட்களில் சான்றிதழ் வாங்கப்படும் என தெரிவித்தனர்.
தடுப்பூசி சான்றிதழை கோவின் இணையதளத்தில் இருந்துதான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் வந்தது. அதில், மருத்துவமனை பெயர் அதில் இடம்பெறவில்லை. இது பற்றி அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த போலீசார், 4 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றி கூடுதல் போலீஸ் கமிஷனர் திலீப் சவந்த் கூறுகையில், ‘‘தடுப்பூசி முகாமுக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து தடுப்பூசிகளை இந்த கும்பல் வாங்கியுள்ளது. அதை விற்றவர், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.