Police Department News

மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட வழக்கில் கடத்தி வந்த இருவர் கைது

மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட வழக்கில் கடத்தி வந்த இருவர் கைது

மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட விவகாரத்தில், அவர்களை இந்தியாவுக்குள் அழைத்து வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை அருகே இலங்கையை சேர்ந்த 27 பேரை கியூ பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தது, அங்கிருந்து மதுரைக்கு சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரை கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், கைதான இலங்கையை சேர்ந்த சிலரை விசாரணைக்காக தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் எந்த பகுதியில் தரையிறங்கினர்.

பின்னர் எங்கு தங்கி இருந்தார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர். அப்போது, இலங்கையை சேர்ந்த 27 பேரும் நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு படகுக்கு மாற்றி விடப்பட்டதாகவும், அவர்கள் அங்கிருந்து தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதிக்கு வந்து கரையேறியதும் தெரியவந்தது. பின்னர் 27 பேரும் தூத்துக்குடியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ஊரடங்கு நேரத்தில் மதுரைக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதுரை கியூ பிரிவு போலீசார், இலங்கைக்காரர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த கருத்தகண்ணு, சாக்ரடீஸ் ஆகிய 2 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக இலங்கைக்கு விரலி மஞ்சள், கடல் அட்டை, வெங்காய விதை, பீடி இலை போன்ற பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் இருந்து ஆட்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.